டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இந்தியராக ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பாராட்டு மழையை பொழிந்து தள்ளினர்.
நூற்றாண்டு சாதனை என்றால் சும்மாவா? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பதை கொண்டாடாமல் இருக்கலாமா? பல்வேறு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில், அவரது சொந்த மாநிலத்தில் எப்படி பாராட்டினார்கள் தெரியுமா?
பானிபட் போர் என்றால் நமக்கு கண்டிப்பாக நினைவுக்கு வரும். அரியானா மாநிலத்தில் உள்ள அதே பானிபட்டை சேர்ந்தவர் தான் நீரஜ் சோப்ரா. அவரது வெற்றியை அம்மாநில மக்களே கொண்டாடி வருகின்றனர். அதிலும், முதலமைச்சர் கட்டார், சந்தோசத்தின் விழிம்பில் சென்றுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரியானா வீரர் என்றால் சும்மாவா என்று மகிழ்ச்சியை ஆர்ப்பரித்துக் கொட்டினார்.
பின்னர் பேசிய அவர், நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தார். அது மட்டுமல்லாமல், அவருக்கு கிளாஸ் 1 தகுதி வேலை அறிவித்ததோடு, தடகள வீரர்களுக்கு சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் அமைக்கப்படும் என்றும் கூறிய அவர், நீரஜ் சோப்ரா விருப்பப்பட்டால் அதற்கு தலைமை ஏற்கலாம் என்றார். மேலும், முக்கியமான இடத்தில் 50% சலுகையுடன் வீடும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
நாட்டிற்கே பெருமை சேர்த்த தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு இந்த பரிசு எல்லாம் சொற்பம் என்றால் அது மிகையல்ல. அவருக்கு மேலும் பல பரிசுகளை வழங்குவதோடு, அவரைப்போன்று உள்ள மற்ற வீரர்களையும் ஊக்குவித்து, அடுத்த ஒலிம்பிக்கில் சாதனை படைக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.