கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகர் மற்றும் எஸ்டி பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வபோது விட்டு, விட்டு, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அதோடு தொடர்மழையின் காரணமாக, சோலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக, சில பகுதிகளில் மண் சரிவு உண்டாகி வீடுகள் சேதமடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு மற்றும் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஆகவே வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு, ஸ்டேன்மோர் ஆறு, உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. ஆகவே எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும், இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுரைத்திருக்கிறார்கள்.
இதற்கு நடுவே தொடர் கனமழையின் காரணமாக, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தால், அதோடு கனமழை பெய்கின்ற சமயங்களில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மாணவ, மாணவிகள், வந்து செல்லும் சிரமத்தை கருத்தில் வைத்தும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்றும், நாளையும், வால்பாறை தாலுகாவிலிருக்கின்ற பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வால்பாறை தாசில்தார் விஜயகுமார் கூறியிருக்கிறார்.