தமிழகத்தில் பெய்து வரும் கனமழை! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு மத்தியில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருகின்றது. இதனால் கடந்த புதன்கிழமை அதாவது நேற்று(நவம்பர்29) சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் “தற்பொழுது தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செய்ய வேண்டும்.
புயலை முன்னிட்டு 14 கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு கூட்டிச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் கரை திரும்பி விட்டதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.