தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள். கனமழை பெய்து வர காரணம் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவது ஆகும். இதனை தொடர்ந்து இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நீலகிரி, கடலூர், கோவை, திருப்பூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், அதை ஓட்டிய ஆந்திரா கடலோர பகுதிகள், மன்னார்வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும், அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை நிலவரத்தை பார்த்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.