தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் கனமழை எச்சரிக்கை ! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் ஈரோடு, திண்டுக்கல், தேனி சிவகங்கை, மதுரை ,தஞ்சாவூர், நாகை ,விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கோவை ,நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரை தமிழகத்தில் அதிக மழை பெய்த மாவட்டங்களில் நீலகிரி 18 சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
கர்நாடகா, கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் ,மன்னார் வளைகுடா, தென்மேற்கு அரபிக்கடல், ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.