தமிழக பகுதியில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம்: கனமழைக்கு வாய்ப்பு!

Photo of author

By Mithra

மத்திய அரபிக் கடல் பகுதி, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை,  இன்று மத்திய அரபிக் கடல் பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் முன்னேறியுள்ளது.

மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து வருவதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனையொட்டிய கிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி, சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயாவின் ஒரு சில இடங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.