வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்!

Photo of author

By Hasini

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்!

நேற்று முன் தினம் இந்த நேரத்திற்கெல்லாம் குன்னூர் மலைப் பகுதியில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்த நிலையில், விமானி மட்டும் இன்னும் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

அதன் காரணமாக அவரை பெங்களூர் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து கொண்டு உள்ளனர். அந்த விமானத்தில் முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட உயர்ந்த ராணுவ வீரர்கள் பலரும் அங்கேயே எரிந்த நிலையில் இறந்து போயினர். அவர்களது அடையாளங்கள் கூட தெரியாத அளவிற்கு அவர்களது மரணம் மிகவும் கோரமான நிலையில் ஏற்பட்டுள்ளது.

அவர்களை டி.என்.ஏ பரிசோதனை மூலம் தான் யார்? யார்? என்பதை கூட கண்டறிய முடிந்தது. இந்நிலையில் அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் அந்த விமானத்தின் கடைசி நிமிடங்களை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பலரும் பார்த்து வருகின்றனர். அந்த வீடியோ காட்சிகளில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த அந்த ராணுவ ஹெலிகாப்டர் பனி மூட்டமாக இருந்த மலைப்பகுதியில் மிகவும் தாழ்வாக செல்வது இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்து சிறிது நேரத்தில் எல்லாம் அது மரத்தில் மோதி மிகுந்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த வீடியோ எடுக்கும் நபர்கள் இது குறித்து அப்போது பேசுவது கூட அதில் பதிவாகி இருக்கும். அந்த வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள் யார்? என்பது குறித்தும் எங்கு எடுக்கப்பட்டது? என்பதை உறுதி செய்யவும் தற்போது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கோயமுத்தூர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமண புகைப்பட கலைஞரான ஜோ தனது நண்பர் நாசர் என்பவருடன் இன்று காலை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தான் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதிக்கு படம் எடுப்பதற்காக சென்றிருந்ததாகவும், அப்போது ஹெலிகாப்டர் செல்வதை கவனித்து, அதன் சத்தத்தை கேட்டும், அதை தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் காந்திபுரத்தில் அச்சகம் நடத்தி வரும் அவரது நண்பரான நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் புதன்கிழமை ஊட்டிக்கு சுற்றுலா சென்றதாகவும் தெரிவித்தார். அவர்களுடன் இவரும் இணைந்து சென்றதாகவும் கூறியுள்ளார். சம்பவத்தன்று மதியம் 12.15 மணியளவில் அவர்கள் காட்டேரி அருகே மலை இரயில் பாதை அடைந்தனர்.

அங்கு குடும்பத்தினர் அனைவரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹெலிகாப்டர் சத்தம் கேட்கவே அதையும் சேர்த்து நாங்கள் வீடியோ எடுத்தோம் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது நான் அந்த வீடியோவை 19 நிமிட வினாடிகளில் எடுத்துள்ளேன். ஹெலிகாப்டர் மேக கூட்டத்துக்கு செல்லும்போது சீராக தான் பறந்து சென்றது.

அதன் பிறகு மறைந்து விட்டது. ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் அது மரத்தில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து விழுந்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். ஆனால் எரிந்த நிலையில் ஹெலிகாப்டர் கீழே கிடந்தது. அந்த வீடியோவை போலீசிடம் தற்போது ஒப்படைத்து விட்டோம். இந்த விபத்தில் எங்களது வீடியோவும் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.

ஊட்டியை அடைந்ததும் நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சென்று பார்க்க முயற்சித்தோம். ஆனால் அதிகாரிகளிடம் எங்களது செய்தியை தெரிவிக்க முடியவில்லை. எனவே நாங்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு திரும்பி அங்குள்ள அதிகாரிகளுடன் செய்திகளை பகிர்ந்து கொண்டோம் எனவும் கூறியுள்ளார்.