இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!
கழிவுநீர் அகற்றும் பணியில் இனிமேல் விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கழிவுநீர் சுத்தம் செய்வது பற்றிய ஆய்வுக்கூட்டம் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்க, வட்டார போக்குவரத்து அலுவலர், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர், உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் குமரன் கூறியுள்ளதாவது,
1. கழிவுநீர் சுத்தம் செய்யும்போது தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய அனுமதிக்ககூடாது.
2. பணியாளர்கள் உரிய பாதுகாப்பு கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இதனை மீறி செயல்படுவோருக்கு முதல் முறையாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் என்றும் 2-வது முறையாக இதே குற்றத்தை செய்தால் 5 ஆண்டு் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் உரிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும்போது உயிரிழப்பு ஏற்பட்டால், இப்பணியில் ஈடுப்படுத்திய உரிமையாளரோ அல்லது பணி அமர்த்தியவரோ ரூ.15 லட்சம் இழப்பீடாக உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும்.
பின்னர் கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் 6 தனிப்படை பாதுகாப்பு உபகரணங்களான பிரதிபலிப்பு ஆடை, பாதுகாப்பு கண் கண்ணாடிகள், கம்பூட்ஸ், பாதுகாப்பு கையுறை, தலைபட்டை இருப்பதையும், இவற்றை பணியாளர்கள் அணிவதையும் உறுதி செய்திருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு முதல் முறையாக ரூ.25000, 2-வது முறையாக ரூ.50000 அபராதம் விதிக்கப்படும்.
கழிவுநீர் வாகனங்களின் சேவைக்கான தேசிய உதவி சேவை எண் 14420, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பதிவு செய்து உரிமம் பெற்ற வாகனத்தை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், அலுவலர்கள், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.