10ம் வகுப்பு பொது தேர்வு – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

0
108

10ம் வகுப்பு பொது தேர்வு – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து ஆலோசனை நடத்திய பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அரசிடம் இது குறித்து கருத்து கேட்டார். 10ம் வகுப்பு பெரும்பாலான வேலைகளுக்கு அடிப்படைத் தகுதி என்பதால் கண்டிப்பாக தேர்வு நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்து அட்டவணையை வெளியிட்டார் செங்கோட்டையன். கொரோனா பரவல் தமிழகத்தில் உச்சத்திலிருக்கும் இந்த நிலையில் இந்த தேர்வை தற்போது நடத்துவது அவசியமா என அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அரசின் தேர்வு அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர், தொடர்ந்துள்ள வழக்கில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 61 பேர் இந்த நோய் பரவல் தாக்கி இறந்துள்ளனர். 8 ஆயிரத்து 718 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வருகிற ஜூன் 1- ந் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், நோய் தொற்றை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். ஏற்கனவே தமிழகத்தில் 200 குழந்தைகள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால், கொரோனா வைரஸ் தொற்று மாணவர்களிடையே பரவி, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை வருகிற ஜூன் 1ம் ந்தேதி நடத்த தடை விதிக்க வேண்டும். அமைச்சரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பொது தேர்வு நடத்த தடை விதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் இனி தமிழக அரசு மனது வைத்தால் மட்டுமே பொது தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளது.

Previous articleமது பிரியர்களுக்கு நற்செய்தி!
Next articleதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய தயாநிதிமாறன்! அதிருப்தியில் திமுக தலைவர் ஸ்டாலின்