வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன்தினம் வரை கடந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்று புறநகர் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்ற சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, பல மாவட்டங்களில் மழை நீர் வடியாமல் இருக்கின்ற சூழ்நிலையில், மேலும் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகின்றதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த விதத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதோடு நெல்லை மாவட்டத்தின் கடலோர பகுதிகளான வள்ளியூர், ராதாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்திருக்கிறார்.