வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

Photo of author

By Parthipan K

சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் டாக்டர் கண்ணன், செந்தில்குமார், பிரதீப்குமார் ஆகியோர் இந்து அமைப்பு பிரதிநிதிகளிடம் பேசினார்கள்.

அப்போது காவல்துறை தரப்பில் , ‘கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் தமிழக அரசு விடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் அ ‘சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என்றும் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே வீட்டில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.