நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல கட்டங்களாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரி திறக்கபடுவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரியில் சேருவதற்காக வெளி மாவட்டங்கள் பயணம் செய்வதாக இருந்தால் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி இ-பாஸ் வாங்குவது தற்போது சிரமமாக உள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறன்றது.
இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையா என்பது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதுவரையில் மாணவர்கள் அவர்களின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் காண்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதுபோல அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை வரும் 17ம் தேதி முதல் தொடங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.