எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயார் – இயக்குனர் அமீர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நேற்று தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் இல்லம், இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுதொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்றார். தொழுகை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் என்னிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தியது, ரைடு நடந்தது அனைத்தும் உண்மை தான்.
நேற்று இரவு தான் அமலாக்கத்துறையினர் சோதனை முடிந்தது. இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலே எந்த விசாரணையாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள நான் தயார் என்று நான் கூறி வருகிறேன்.அமலாக்கத்துறையினரின் விசாரணை நேர்மையாக தான் நடைபெற்று வருகிறது.ஆனால் அதன் பின்னால் அழுத்தம் உள்ளதா என்பது எனக்கு தெரியாது.
சோதனையின்போது அமலாக்கத்துறையினர் என்ன ஆவணங்கள் எடுத்தார்கள் என்று நான் கூற முடியாது.அதை அவர்கள் தான் கூற வேண்டும். வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரம் குறித்து என்னால் முழுமையாக எதுவும் பேச இயலாது.எனக்கு கால அவகாசம் வேண்டும்.என் மீதான இந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பேன்” என கூறியுள்ளார்.