
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, புகைப்படம் இடம்பெறாத திலிருந்தே , செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் , இடையே கருத்து வேறுபாடு காணப்பட்டது. அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் இருந்த மோதல் பெரிதாகிக் கொண்டே சென்றது.
இந்நிலையில் செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அவரது தொண்டர்களும், மூத்த அமைச்சர்களும் அவர் என்ன பேசப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள குவிந்தனர்.ஓ.பன்னீர்செல்வம் , சசிகலா, டி.டி.வி தினகரன் போன்றோரை கட்சியில் இருந்து நீக்கியதிலிருந்தே கட்சி வலுவிழந்து விட்டதாக எண்ணிய செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அ.தி.மு.க வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென்றும் , இதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
அப்படி இணைக்காவிட்டால் ஒருங்கிணைப்புப் பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்றும் அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியிடம் 6 மூத்த அமைச்சர்கள் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார். 2026- ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்தால் தான் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியில் அமர முடியும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன் இவ்வாறு கூறியது அவருக்கு கட்சியில் இருந்து விலகும் எண்ணம் இல்லையேன்பது தெளிவாக தெரிகிறது. அ.தி.மு.க வை ஒன்று பட்ட கட்சியாக மாற்றுவதே அவருடைய நோக்கமாக கொண்டிருக்கிறார். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சி எவ்வாறு செயல்பட்டதோ அதே போல் கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கமாக உள்ளது. தனது தலைமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்த எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்திலிருந்தே கட்சியின் மூத்த அமைச்சர்களை ஒதுக்கி வந்தார் என்ற கருத்து நிலவுகிறது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த அ.தி.மு.க தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்ததோடு, 2021 இல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியை கண்டது.
அ.தி.மு.க தொண்டர்களின் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளது . எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் நலனையும் , எதிர்காலத்தையும் மனதில் வைத்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. தற்போது செங்கோட்டையன் இவ்வாறு கூறியதால் கட்சியிலிருந்து நீக்கியவர்களை, சேர்க்கும் பணியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுவாரா? இல்லை அவருடைய முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .