நம் உடம்பில் இரும்புச் சத்து, கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால் கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் அந்தக் கீரையை எவ்வாறு சரியான முறையில் எடுத்துக் கொள்வது… எவ்வாறு எடுத்துக் கொண்டால் நமக்கு தேவையான சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்… என்று பலரும் அறியாமல் இருப்போம் அதனை குறித்து தற்போது காண்போம்.
நமது உடம்பில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் முருங்கைக்கீரையை எடுத்துக் கொள்வது நல்லது என்று நம் அனைவரும் அறிவோம். ஆனால் அதனுடன் விட்டமின் C யும் சேர்த்து எடுத்துக் கொண்டால்தான் இரும்புச்சத்து முழுமையாக நமது உடம்பிற்கு கிடைக்கும்.
இரும்பு சத்தினை அசைவத்தின் மூலமும் பெறலாம் அதனை Heme Iron என்றும், தாவரத்தில் இருந்து பெறக்கூடிய இரும்புச்சத்தினை Non Heme Iron என்றும் கூறுவர். அசைவத்தின் மூலம் இரும்பு சத்தினை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது உடம்பானது விரைவாக இரும்பு சத்தினை நமது ரத்தத்தில் கலந்து கொள்ளும். ஆனால் தாவரத்தின் மூலம் இரும்பு சத்தினை பெறும் பொழுது மெதுவாகவே நமக்கு கிடைக்கிறது. எனவேதான் தாவர வகைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது விட்டமின் C யும் சேர்த்து எடுத்துக் கொண்டால் விரைவாக நமக்கு தேவையான சத்து கிடைக்கும்.
அசைவத்தினை சாப்பிடாமல் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எனவே இவர்கள் இரும்பு சத்துக்காக கீரையை எடுத்துக் கொள்ளும் பொழுது அதனுடன் விட்டமின் C உள்ள பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். விட்டமின் C அதிகம் உள்ள நெல்லிக்காய், கொய்யாக்காய், ஆரஞ்சு பழம், தக்காளிப் பழம்,…. இவற்றையெல்லாம் எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் வைட்டமின் C உள்ள பொருட்களை கீரை உடன் சேர்த்து சமைக்க முடிந்தால் சமைக்கலாம் அப்படி இல்லை என்றால் கீரையை எடுத்துக் கொண்ட அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குள் விட்டமின் C உள்ள உணவினை எடுத்துக் கொள்ளும் பொழுது கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
இதேபோன்று கீரையில் கால்சியம் சத்தும் உள்ளது. இது எலும்பை வலுப்படுத்த உதவும். இந்த கால்சியம் சத்து முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் விட்டமின் D யை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விட்டமின் D ஐ சூரிய ஒளி, காளான், முட்டையின் மஞ்சள் கரு,….. போன்றவற்றில் இருந்தும் நாம் பெறலாம்.
நாம் உபயோகப்படுத்தக்கூடிய மஞ்சள் தூளில் CURCUMIN என்ற சத்து உள்ளது. இந்த சத்தானது நமது உடம்பில் வீக்கம் ஏற்படாமலும், கிருமி நாசினியாகவும், கேன்சர் வராமல் பாதுகாக்கவும் செய்யும். இந்த CURCUMIN சத்து நமது உடம்பிற்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அதனுடன் PIPERINE என்ற சத்தினை உடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சத்தானது மிளகில் உள்ளது.
இத்தகைய பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக எடுத்துக் கொள்வதை காட்டிலும் அதனுடன் நமது உடம்பிற்கு விரைவாக அந்த சத்தினை கொண்டு செல்லக்கூடிய மற்ற சத்துக்களையும் சேர்த்து சாப்பிடும் பொழுது அனைத்து சத்துக்களும் நமது உடம்பினுள் விரைவாக பரவும். இந்த முறைகளை தெரிந்து கொண்டு தேவைப்படும் பொழுது நமது உணவில் மாற்றத்தை ஏற்படுத்தி சாப்பிடலாம்.