ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடை காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது பற்றிய ஆலோசனை நேற்று அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் உடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போதுள்ள கோடை காலங்களில் மின்தடை, தடையில்லா மின்சாரம், மின் சாதனங்கள் பழுது சரி பார்த்தல் போன்றவற்றை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கெரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
மின்வாரிய கழகத்தில் பணிபுரியும் அனைத்து முன்கள பணியாளர்களும் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மாவட்டங்களிலும், முக்கியமாக மலைவாழ் பகுதி மக்கள் வாழும் இடங்களில் மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கான வழி முறைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் ஆறு மாத காலமாக பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளதால் அனைத்து அலுவலர்களும் காலமுறையில் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இன்னும் எந்த பகுதியில் காலமுறை பராமரிப்பு பணிகள் தொடங்குகிறதோ? அந்த பகுதி மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்திகளை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான விவரங்களுக்கு புகாரளிக்க 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் மின்தடை/பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவலை தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்அப் (Whatsapp) செயிலி எண் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் மற்றும் மின் தடை ஏற்படும் இடங்களில் விரைவாக செயல்பட்டு மின்தடையை உடனுக்குடன் நீக்க நடவடிக்கைகள் எடுக்கமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார்.