நாம் தினமும் பல் துலக்குவது ஒரு தவறாத பழக்கம். ஆனால், பயன்படுத்தும் டூத் பிரஷ் சுத்தமாக இல்லாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல வதைக்கக்கூடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? டூத் பிரஷின் பாதிப்பு மற்றும் அதை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
டூத் பிரஷ் என்றாலே பற்களை சுத்தம் செய்யும் கருவி என்று தான் நினைப்போம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம், எங்கு வைக்கிறோம் என்பதில் தவறு இருந்தால், அதே டூத் பிரஷ் உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்: மலம் கழிக்கும்போது காற்றில் மிதக்கும் துகள்கள் டூத் பிரஷ்ஷில் ஒட்டுகிறது. 2012 இல் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 25 செ.மீ வரை மல துகள்கள் பரவுகின்றன என்று கண்டறியப்பட்டது. அதனால், டூத் பிரஷை கழிப்பறைக்கு அருகே வைப்பது மிகவும் ஆபத்தானது.
பிரஷ்ஷை மூடி வைப்பது நன்றா? தவறா?
சிலர் பிரஷ்ஷை முற்றிலும் மூடி வைத்துவிடுவார்கள். இது தவறான நடைமுறையாகும். ஈரப்பதம் அடையும் போது, பாக்டீரியா இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்புகள் அதிகம். அதற்கு பதிலாக, காற்றோட்டம் உள்ள இடத்தில் பூச்சிகள் தொற்றாதபடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
ஒரு பிரஷ்ஷில் இருந்து இன்னொன்றுக்கு பாக்டீரியா பரவுமா?
உங்கள் டூத் பிரஷ்களை மற்றவரின் பிரஷ்ஷுடன் சேர்த்து வைக்கிறீர்களா? இது மிகப் பெரிய தவறு. பிரஷ்ஷுகள் உரசும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். அனைவரும் தனித்தனியாக பிரஷ்ஷை வைத்துக் கொள்வது சுகாதார ரீதியாக மிகவும் அவசியமானது.
டூத் பிரஷை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம்?
1. குளியலறை அல்லது கழிப்பறையில் வைப்பதை தவிர்க்கவும்.
2. பல் துலக்கிய பிறகு பிரஷ்ஷை நன்கு சுத்தம் செய்து, காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.
3. டூத் பிரஷ் ஹோல்டர் அல்லது மூடிகளை பயன்படுத்தலாம். மூடிகளைப் பயன்படுத்தும் போது, காற்றோட்டம் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
4. சுடுநீரில் டூத் பிரஷ்ஷை வாரம் ஒரு முறை கழுவும் பழக்கத்தை விரைவில் தொடங்குங்கள்.
மூன்று மாதங்களில் மாற்ற மறந்துவிடாதீர்கள்!
ஒரு டூத் பிரஷ்ஷின் ஆயுட்காலம் மிகக் குறைவு. மூன்று மாதங்களுக்கு மேலாக அதை பயன்படுத்தினால், பற்களை சுத்தம் செய்யும் திறன் குறையும். மேலும், பழைய பிரஷ்ஷில் பாக்டீரியாக்கள் அதிகமாகி இருக்கும். இதனால் வாய் துர்நாற்றம், பூஞ்சை தொற்றுகள், பாக்டீரியா பரவல் ஆகியவை ஏற்படலாம்.
உங்கள் பற்களைப் பாதுகாக்க புதிய வழிமுறைகளைத் தொடங்குங்கள்!
நாம் தினமும் பல் துலக்கி ஆரோக்கியத்தை பாதுகாக்க முயல்கிறோம். ஆனால், சின்ன தவறுகளால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அது பெரிய பிரச்சனையாக மாறும். இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்:
தினசரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், டூத் பிரஷ்ஷை சுத்தமாக வையுங்கள்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய டூத் பிரஷ் வாங்குங்கள்.
டூத் பிரஷை ஒவ்வொரு முறையும் உலர்ந்த இடத்தில் பாதுகாப்பாக இருக்கட்டும்.