மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!!
காமராஜர் பிறந்த இந்நாளை தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பேசுகையில், கல்வியில் சிறப்பு வாய்ந்த நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதில் அன்பில் மகேஷ் அதீதமாக உழைத்து வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் உடல் நிலை குறித்தும் பேசினார். தற்பொழுது முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் வரும் 75 நாட்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளதாக கூறினார். மேலும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இந்நாளை கள்ளி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி சென்னை கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவிடம் கட்டியது, சாலைக்கு காமராஜர் பெயர் சூட்டியது மற்றும் விமான நிலையத்திற்கும் காமராஜர் என பெயர் வைத்தது இவை அனைத்தும் மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களால் தான் என்று கூறினார்.
இதனையடுத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, பள்ளி மாணவர்களின் ஆசியால் முதலமைச்சர் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறினார். பள்ளிகளில் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் காமராஜர் தான் என்று கூறினார். ஏனென்றால் அக்காலத்தில் சில குலத்தினர் மட்டுமே கல்வி கற்று வந்தனர். அதனை முழுவதும் எதிர்த்து அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என எண்ணி அதற்கு பெரிய பங்காற்றியவர் காமராஜர் என கூறினார். மாணவர்களுக்கு மாலையில் சிற்றுண்டி துவங்கி வைக்கும் திட்டமானது முதல்வர் வீடு திரும்பிய பிறகு துவங்கும் என்று தெரிவித்தார்.
அதேபோல கடந்த ஆண்டு முதல் லேப்டாப் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 11 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். லேப்டாப் வழங்குவது தாமதம் ஏற்பட்டு வருவதால் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு திட்டத்தை ரத்து செய்யப்படவில்லை என திட்டவட்டமாக கூறினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாப்[ tab] வழங்குவோம் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் மாணவர்களிடம் இருந்து ஆய்வு மேற்கொண்ட போது டாப்பை[tab] ஐ விட லேப்டாப் தான் அவர்களுக்கு அதிக பயன் அளிப்பதாக தெரிவித்தனர். அதனால் டேபிளுக்கு பதிலாக லேப்டாப் வழங்கப்படும் என்று கூறினார்.