தமிழகத்தில் சென்ற மே மாதம் நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 20ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியிட்டார். அதில் 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை விட வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதாவது மாணவர்களை விட 5.36 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
அதே போன்று 10ம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அதாவது மாணவர்களை விட மாணவர்கள் 8.55% அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கு வருகின்ற 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் 8ம் தேதி வரையிலும், துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கூறியிருக்கிறார்.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் அவரவர் பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.