அண்ணா பிறந்த காஞ்சியில் சத்தமே இல்லாமல் தவெகவின் விசில் சத்தம்.. வெளியான கருத்துக்கணிப்பு 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 23 இல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கிறது. அதே போல நாம் தமிழர் கட்சி, விஜய் ஆரம்பித்துள்ள தவெக மற்றும் சசிகலா & ராமதாஸ் அணி என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவுவதால், தேர்தலானது மிகவும் சவாலுடையதாகவும் வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாத நிலையையும் உருவாக்கியுள்ளது. இதனையெல்லாம் தாண்டி பலரும் இம்முறை மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முயற்சிக்கின்றனர். காலம் காலமாக நான், நீ என்று ஆண்டு வந்த 

திமுக மற்றும் அதிமுகவை தாண்டி ஆட்சியை பிடிக்க நாம் தமிழர் கட்சியும் தவெகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் “ஆயிரம் கோயில்களின் நகரமான” காஞ்சிபுரத்தில் ஐந்து முனை போட்டியில் தவெக தனது விசில் சத்தத்தை அதிகப்படுத்தி விட்டதை சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

காஞ்சிபுரம் தொகுதி:

கோயில்களின் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை, பாமக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எழிலரசன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் உள்ள இத்தொகுதியில் வன்னியர் மற்றும் முதலியார் உள்ளிட்ட சமூக வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் தான் வேட்பாளர்களும் களமிறக்கப்படுகின்றனர்.

திமுகவுக்கு மைனஸ்:

திமுக சார்பில் இந்த தொகுதியில் நித்யா சுகுமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. களத்தை பொறுத்த வரையில் சிட்டிங் எம்.எல்.ஏவான எழிலரசன் மீது அதிருப்தி நிலவுவதாகவே வெளியான அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அடுத்து மேயர் மகாலட்சுமி  யுவராஜ்  மற்றும் ஒன்றிய செயலாளர் பிஎம் குமார் உள்ளிட்டோர் சீட் பெறுவதற்கான முயற்சியில் இருந்த நிலையில் நித்யா சுகுமாருக்கு கிடைத்துள்ளது இவர்களின் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் தொடர்ந்து தொகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது இந்த தேர்தலில் தீவிரமாக எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. பட்டுக்கு பெயரெடுத்த இங்கு பட்டு நூலின் விலை உயர்வு, இடைத்​தரகர்​களின் ஆதிக்​கம் உள்ளிட்டவை முக்கிய பிரச்சனைகளாக உள்ளது. அடுத்து ஆன்மீக தளமாக விளங்கும் இங்கு அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப சாலைகள் அமைக்காமல் இருப்பதால் உருவாகும் வாகன நெரிசல், அடுத்து கட்டுமானங்களை மேற்கொள்ள தொல்லியல் துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை திமுகவுக்கு எதிராக அமையும் என்று கூறப்படுகிறது.

அதிமுகவின் சிக்கல்:

அதிமுக சார்பில் சோமசுந்தரம் இங்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில் வன்னியர் சமுதாய வாக்குகள் இவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் சமூக வாக்குகள் அனைத்தும் அவருக்கு கிடைக்குமா என்பதில் சந்தேகம் தான். பாமகவில் அப்பா மகன் இருவரும் தனித்தனியே தேர்தல் களத்தை சந்திக்கும் நிலையில் ராமதாஸ் அணியின் வேட்பாளர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்கு வங்கியை கொண்ட வன்னியர் சமூக வாக்குகள் பிரிவதால் அதிமுக வெற்றியை அது பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.

காஞ்சியில் விசிலடிக்கும் தவெக: 

திமுக அதிமுக கோட்டையை தகர்க்கும் வகையில் தவெக வின் “விர்சுவல் வாரியர்ஸ்” அதி தீவிரமாக தங்களது கள பணியை செய்து வருகின்றனர். காஞ்சியில் தவெக சார்பாக (ஆர்.வீ.ஆர்) ஆர்.வீ . ரஞ்சித்குமார் போட்டியிடுகிறார். மாற்றத்தை நோக்கிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் காஞ்சி நகர மக்கள் இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக உள்ளூர் இன்ஸ்டாகிராம் சேனல் மற்றும் தனியார் செய்தி ஊடகங்கள் News7 Tamil மற்றும் மின்னம்பலம் எடுத்த கருத்து கணிப்பில் திமுக, அதிமுகவை கடந்து தவெகவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். அந்தவகையில் திமுக அதிமுக கோட்டையான அண்ணா பிறந்த காஞ்சியில் தவெக விசில் சத்தம் எகிறும் என்று கூறப்படுகிறது.  

கண்டுகொள்ளாத நாதக:

நாதக சார்பில் வெற்றி செல்வி போட்டியிடுகிறார். அரசியல் விவாதங்கள் முதல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வரை நாம் தமிழர் கட்சியை பெரிதாக யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. மற்ற மூன்று கட்சிகளை பிரதானப்படுத்தி, மற்றவை என்ற இடத்தில் நாம் தமிழர் கட்சி சுருங்கி விட்டது என்றே சொல்லலாம்.

காஞ்சிபுரம் தொகுதியில் நிலவும் திமுகவின் உட்கட்சி பூசல், தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள், அதிமுகவின் கூட்டணி குழப்பம் உள்ளிட்ட காரணங்கள் அக்கட்சிகளுக்கு பின்னடைவாக அமைய தவெக வெற்றியை இங்கு உறுதி செய்கிறது. அந்த வகையில் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் தவெகவுக்கு கிடைக்கும் ஆதரவு மற்றும் கருத்து கணிப்பு முடிவுகளை பார்த்து சற்று அச்ச நிலையிலேயே உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.