சேலத்தில் ஆஃப் பாயில் போட்ட நபர்களை அள்ளிச்சென்ற போலீசார்!!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்றாற்போல் நாளாக நாளாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. மேலும், பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இந்தியாவில் அதிகமான வெப்பம் பதிவான நகரங்களின் பட்டியலில் சேலம் முதல் இடத்தில் உள்ளது. இதனால் சேலம் மக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வெளியே செல்ல வேண்டாமென அம்மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இப்படி சேலத்தில் வெயில் கொளுத்தி கொண்டிருக்கும் சமயத்தில் வெயிலின் தாக்கத்தை பொதுமக்களுக்கு உணர்த்த முயற்சி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுவெளியில் முட்டையை உடைத்து பிரபாகரன் என்பவர் ஆஃப் பாயில் போட முயன்றுள்ளார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த போலீசார் பிரபாகரன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு நபரை கைது செய்தனர். பொதுவெளியில் ஆஃப் பாயில் போடுவதற்கு அனுமதி வாங்கவில்லை என்ற காரணத்தால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்கள்.