அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை!! சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

Photo of author

By Savitha

கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி மனித இடைவெளி பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும் வழக்கு பட்டியலில் இல்லாத நிலையில் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற அறை,நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும், நீதிமன்ற அறை வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும் முக கவசம் அணிவது, தனி மனித இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துவது போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே கடந்த 10ம் தேதி முதல், சென்னை உயர் நீதிமன்ற மற்றும் மதுரை கிளையில் காணொளி காட்சி மற்றும் நேரடி முறையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.