விவசாயிகளுக்கு பாதிப்பளிக்கும் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வராது – அண்ணாமலை உறுதி 

Photo of author

By Savitha

விவசாயிகளுக்கு பாதிப்பளிக்கும் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வராது – அண்ணாமலை உறுதி

தமிழகத்தின் வேளாண் பாதுகாப்பு மண்டலமான டெல்டா மாவட்டம் உள்ளிட்ட எங்கும் விவசாயிகளுக்கோ விவசாய நிலங்களுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வராது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று 44 ஆம் ஆண்டு பாஜக துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநிலத் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி , சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை நமிதா ஆகியோர் பங்கேற்றனர்.

கமலாலய பகுதி கிளை தலைவர் நித்திய பிரியா கட்சிக்கொடியின் கயிறை அவிழ்த்து கொடுக்க பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக கொடியை ஏற்றினார்.மேலும் பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைப்பதாகவும், கமலாலயம் அமைந்துள்ள பகுதியில் கிளை தலைவர் நித்திய பிரியா அவர்களின் உழைப்பு அபரிவிதமானது என்று கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்தார்.

தமிழக பாஜக சார்பில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு தமிழ் நாட்காட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது. தேச தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் உருவப்படங்கள் குறித்த நாட்காட்டிகள் இன்று வெளியிடப்பட்டது.

44 ஆவது பாஜக ஆண்டு துவக்க விழாவையொட்டி டெல்லி தலைமை நிலையத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்வை காணொளி வாயிலாக இங்கிருந்து பார்வையிட்டனர்.

காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டுகளாக இருந்த அத்திப்பட்டு துறைகண்ணன் தலைமையில் 15 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்தவர்களின் கார் மற்றும் பைக்கில் பாஜக ஸ்டிக்கரை அண்ணாமலை ஒட்டினார்.

இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது,

பாஜக கட்சி தற்போது 44-வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.இது சாதாரணமான ஒன்று இல்லை இது ஒரு வரலாறு.திரும்பி பார்க்கும் பொழுது தொண்டர்களாக இருக்கக்கூடிய எங்களுக்கு பிரமிப்பாக இருக்கிறது.

கட்சியை துவங்கும் போது இரண்டு எம்பிக்கள் பதவி மட்டுமே தங்களுக்கு கிடைத்தது.அப்போது பாஜகவை நாடாளுமன்றத்தில் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் பேசும்போது காங்கிரஸ் எம்பிகள் தொடர்ந்து கேலியம் கிண்டிலும் செய்தார்கள்.ஆனால் இன்று அந்த நிலை முற்றிலும் மாறி பாஜக 43 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தள்ளது.

திமுக தொடங்கிய பிறகு தான் பாஜக தொடங்கப்பட்டது. குறுகிய காலத்தில் பாஜக திமுகவை விட அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.பாரத பிரதமர் பாஜகவின் இத்தகைய வளர்ச்சிக்கு தொண்டர்களின் உழைப்பு மட்டுமே காரணம் என்று கூறினார்.அது முற்றிலும் உண்மை தான்.தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் தொண்டர்களின் உழைப்பு அதிகமாக இருக்கிறது என்று பேசினார்.

இதனையடுத்து பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

பாஜகவை பொருத்தவரை 365 நாட்களும் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கும் நாள் தான். அரசியலை பொறுத்தவரை சித்தாந்தமாக செயல்பட வேண்டும். எனவே பாஜக சித்தாந்தத்தில் இருக்கும் உறுப்பினர்கள் வருடம் 365 நாளும் பாஜகவில் இணைந்து கொள்ளலாம் மேலும் பாஜகவில் உறுப்பினர்கள் சிறப்பு முகாம்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

அடுத்ததாக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது குறித்த கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

டெல்டா பகுதிகளை பொருத்தவரை தமிழ்நாட்டில் (RICE Bowl) அங்கு இருந்து தான் தமிழகத்திற்கு உணவு வழங்கப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.தற்போது மத்திய அரசு அதனை ஒப்பந்தமாக வெளியிட்டுள்ளது.இந்த தகவல் வந்தவுடனே அதை நாங்கள் மதிய அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு இங்கு கொண்டு வராது.

டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த ஆட்சியின் போது அறிவித்தார்கள். கண்டிப்பாக விவசாயம் செய்யும் நிலங்கள் மற்றும் பாதுகாக்கும் மண்டலங்களில் சுரங்கங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. மேலும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நல்ல செய்தி தேடி வரும் என்றார்.

அடுத்து பாஜகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

பாஜக பொருத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகுபாஜக உறுப்பினர் எண்ணிக்கை  4 மடங்காக அதிகரித்துள்ளது.

அடுத்து அமலாக்கத்துறையால் அமைச்சர் ஒருவர் கைது செய்ய பட உள்ளதாக கூறினீர்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

அமலாக்க துறையின் விசாரணை மற்றும் பல்வேறு நடைமுறைகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அமலாக்கத் துறையும் இங்கு தான் இருக்கப் போகிறது. அமைச்சர்கள் எங்கும் போய்விட மாட்டார்கள்.ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் பட்டியலில் திமுகவின் இந்த ஆட்சி காலம் மட்டும் இல்லை போன ஆட்சிக் காலத்தில் செய்த ஊழல் குறித்து தகவல் வெளி வரும். யாரும் எங்கேயும் தப்பித்துப் போக முடியாது என்றார்.