பிரித்திவிராஜின் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவான திரைப்படம்தான் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியிருக்கிறது. இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகியிருக்கிறது.
மார்ச் மாதம் 27ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 200 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. 200 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் என்கிற பெருமை இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது. அதேநேரம், இந்த படத்தில் சிறுபான்மையினர் மீது மதவாத கட்சிகள் நடத்தும் தாக்குதல், குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது மதவாத கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
எனவே, இப்படத்திற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்கபரிவார்த்தன அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர். எனவே, படத்தின் சில காட்சிகளை நீக்கியும், சில வசனங்களை மியூட் செய்தும் மீண்டும் சென்சார் செய்து இப்போது படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு, சர்ச்சைகளை ஏற்படுத்திய காட்சிகளுக்காக மோகன்லால் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், ஆளும் பாஜகவின் கோபம் எம்புரான் படக்குழு மீது திரும்பியிருக்கிறது. பொதுவாக தங்களின் கோபத்தை வருமானவரித்துறை மூலம் காட்டும் பாஜக அரசு எம்புரான் படக்குழு மீதும் அதையே ஏவியிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு எம்புரான் படத்தை தயாரித்த ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இப்போது எம்புரான் பட இயக்குனர் பிரித்திவிராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான கோல்டு, ஜன கன மன, கடுவா ஆகிய 3 படங்களில் பிரித்திவிராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில் கணக்கு விபரங்கள் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 40 கோடி வருமானம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. விரைவில் பிரித்திவிராஜ் வருமான வரித்துறைக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.