செல்வம் பெருக! வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு!
இறைவன் படைப்பில் அதிசயத்தக்க வகையில் கணேச முக வடிவில் காணப்படும் சங்கு இது. இயற்கையிலேயே கணேச முக வடிவுடன் இந்த சங்கு காணப்படும். இந்த கணேச வடிவ சங்கை வீட்டில் வைத்து வணங்குவதால் பலவிதமான நன்மைகள் மற்றும் தோஷங்களை நிவர்த்தி செய்து நல்ல பலன்களை அளிக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.
காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை சங்கில் ஊற்றி கைகளில் வைத்து கொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டு, பின் அந்த நீரை குடித்து விட்டு சென்றால் அன்றைய தினம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
வாகனங்களில் பயணம் செய்யும்போது பயணங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க இந்த சங்கு விநாயகர் அருள்புரிவார் என நம்பப்படுகிறது.
வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த செடியே சிலை வடிக்க உகந்தது. மேலும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது தான் வழக்கம்.
வெள்ளெருக்கு வேருக்கு தெய்வீக சக்தியுள்ளது. எனவே, இந்த வேரை பயன்படுத்தி வடிக்கப்படும் சிலையும் மிகுந்த சக்தி வாய்ந்ததாகும். வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ ஒரு சுத்தமான இடத்தில் வெள்ளெருக்கு விநாயகரை வைத்து வழிபடலாம்.
இவ்வாறு வழிபாடு செய்பவருக்கு செல்வம், செல்வாக்கு, பெருமை கூடும். தன ஆகர்ஷன சக்தியை அள்ளிக்கொடுக்கக்கூடிய வல்லமையானது இந்த வெள்ளெருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது.
வழிபடும் முறை :வெள்ளெருக்கு பிள்ளையாரை புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் வெள்ளிக்கிழமை அரைத்த மஞ்சள் கலவையை விநாயகர் மீது தடவ வேண்டும். பிறகு சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்க வேண்டும் பிறகு நாம் விரும்புவது போல் படையல்யிட்டு வணங்கலாம்.