இந்தியாவின் நெடுஞ்சாலைத்துறை பணிகளில் கூட்டு திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. இதுகுறித்து மத்திய அரசு உறுதியான முடிவு எடுத்துள்ளது. சாலை கட்டுமான பணிகளில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு தடை விதித்தும், இந்திய நிறுவனங்களுக்கு விதிமுறை தளர்வு குறித்தும் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட திட்ட பணிகளில் சீன நிறுவனங்கள் பங்கெடுத்திருந்தாலும் இனி வரும் நாட்களில் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த தடை நடவடிக்கை மூலம் பல்வேறு இந்திய நிறுவனங்கள் பலனடையும். மேலும் தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு போன்றவற்றில் கூட்டுதிட்டமாக இருந்தாலும் சீனாவிற்கு அனுமதி கிடையாது. ஆராய்ச்சி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளை மேம்படுத்த வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கிறோம். நடுத்தர மற்றும் சிறுகுறு தொழில்துறையில் கூட்டு திட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால், அதில் சீனாவை சேர்க்கமுடியாது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியா தடைவிதித்த நிலையில் கட்டுமான பணியில் தடைவிதித்த அறிவிப்பும், இந்திய தரப்பில் சீனாவிற்கு இரண்டாவது பொருளாதார அடியாக விழுந்துள்ளது.