தொடர் வெற்றியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!! இலங்கையை வென்று இமாலய வெற்றி சாதனை!!
இலங்கையை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா முதல் அணியாக அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது.
13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 31 போட்டிகள் முடிவடைந்து விட்ட நிலையில் எந்த அணியும் இதுவரை அரை இறுதிக்குள் நுழையவில்லை. புள்ளி பட்டியலில் இந்திய அணி எந்த தோல்வியும் இன்றி 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முன்னாள் சாம்பியன்களான இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களத்தில் இறங்கினர். இந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு ஏமாற்றமாக முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு சுப்மன் கில் உடன் விராட் கோலி சேர்ந்து இலங்கை அணியின் பந்துவீச்சை அதிரடியாக விரட்டி அரை சதம் கடந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளியே வெளிப்படுத்திய இந்த ஜோடி சதம் அடிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சுப்மன் கில் 92 (11 பவுண்டரி 2 சிக்சர்), விராட் கோலி 88 11 (பௌண்டரி), என அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
இருந்தாலும் அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். ராகுல் 21 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். விராட் கோலிக்கு அடுத்து சிக்சர் மழையில் ரசிகர்களை நனைய வைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 82(3 பௌண்டரி, 6 சிக்ஸர்கள்) எடுத்து அவுட்டானார்.
இதில் 106 மீட்டர் தூரம் சிக்ஸரை பறக்கவிட்டு இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக தூர சிக்சரை ஸ்ரேயாஸ் ஐயர் பதிவு செய்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் தில்சான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளும், துஷ்மந்தா சமீரா ஒரு விக்கட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசாங்கா, கருணா ரத்தினே, ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அதன் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் யாவரும் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்து திரும்பினர்.
இந்திய அணியின் அதிரடி பந்து வீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனது.
இதன் மூலம் 302 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்று 7-வது தொடர் வெற்றியை ருசித்து முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கட்டுகளையும், சிராஜ் 3 விக்கட்டுகளையும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்தியாவின் இந்த அதிரடி வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.