பழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா!! முதலாவது அரையிறுதியில் சூரிய குமாருக்கு பதிலாக இவரா??
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டிகளில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து, அணிகள் முதல் நான்கு இடங்களை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை நவம்பர் 15-ஆம் தேதி முதலாவது அரையிறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற இந்திய அணியும் 4-வது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணியும் மோத உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நிகழ உள்ளது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தான் இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியது.
எனவே அதற்குப் பழி தீர்க்கும் விதமாக நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி அரை இறுதி ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வண்ணம் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
லீக் சுற்றில் இந்தியாவிடம், தோல்வி கண்ட நியூசிலாந்து அணியும் இந்திய அணியை வீழ்த்தி அதன் மூலம் தொடர்ந்து 3-வது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற கடுமையாக விளையாட வாய்ப்புகள் உள்ளது. இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று வெற்றி பெறும் முனைப்புடன் செயல்பட்டு வருவதால் நாளை ஆட்டம் கட்டாயம் சூடு பிடிக்கும்.
இதையடுத்து நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு காரணமாக இடது கை ஆட்டக்காரர்கள் நியூசிலாந்து அணியில் அதிகம் உள்ளதாலும், மும்பை வான்கடே மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாலும், அஸ்வினுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
அஸ்வினுடன் சேர்த்து நாளைய போட்டியில் இந்திய அணி 6 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அஸ்வினுக்கு கடந்த அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நியூசிலாந்துக்கு எதிராக போட்டியிலும் இடம்பெறுவதற்கு அஸ்வினுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.