இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து

0
148
india-saudi-form-strategic-council-News4 Tamil Latest Online News Today
india-saudi-form-strategic-council-News4 Tamil Latest Online News Today

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து

பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர், அராப் நியூஸ் இதழுக்கு பேட்டி அளித்தார்.

மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

இருநாடுகளும் ஜி-20-க்கு உட்பட்டு, சமத்துவமின்மையை குறைக்கவும், நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்தவும், சேர்ந்து பாடுபட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

எண்ணெய் விலைகள் நிலையாக இருப்பது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது என்று கூறியுள்ள அவர், இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு நம்பத்தகுந்த  முக்கிய ஆதாரமாக சவுதி அரேபியா திகழ்வதாகப் பாராட்டினார்.

தமக்கும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இடையே நிலவும் தனிப்பட்ட உறவுகள் சிறப்பாக இருப்பதாக கூறிய பிரதமர், “2016-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு நான் முதன் முதலாக பயணம் செய்தபோது, நமது இருதரப்பு உறவுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை வெளிப்படையாகக் கண்டேன், நான் ஐந்து முறை பட்டத்து இளவரசரை சந்தித்து இருக்கிறேன். எனது முந்தைய சந்திப்புகள் குறித்து அவரிடம் விளக்கியிருக்கிறேன். இந்த முறை பயணத்தின்போதும் அவரைச் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். சவுதி அரேபிய மன்னர் மேன்மை தங்கிய சல்மான், மேன்மை தங்கிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரது தலைமையின்கீழ், இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவுடன் வளரும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

“அண்டை நாடுகள் முதலில்”  என்பது எனது அரசின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டுதல் நோக்காக தொடர்கிறது என பிரதமர் தெரிவித்தார். சவுதி அரேபியாவுடனான இந்திய உறவு, மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது கையெழுத்திடப்படவுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சில் ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், பல்வேறு துறைகளில் புதிய ஒத்துழைப்புக்கான சகாப்தம் தொடங்கவுள்ளது என்றார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை வலுவான, ஆழமான உறவில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு, மேலும் வலுவடையும் என்று அவர் கூறினார்.

“ஆசிய சக்திகளாக விளங்கும் இந்தியா, சவுதி அரேபியா ஆகியவை தங்கள் அண்டை நாட்டிடமிருந்து ஒரே மாதிரியான பாதுகாப்பு தொடர்பான இடையூறுகளை அனுபவித்து வருவதை,  பகிர்ந்து கொண்டுள்ளதாக நான் நம்புகிறேன். எங்களது ஒத்துழைப்பு, குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு குறித்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது குறித்து நான் மகிழ்சியடைகிறேன். எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ரியாத்துக்கு அண்மையில் மேற்கொண்ட பயணம் மிகுந்த பலனுள்ளதாக அமைந்தது” என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு அடிக்கடி கூட்டங்களை நடத்தி வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வம் கொண்ட பல்வேறு துறைகளை இருநாடுகளும் கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார். 

“பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்புத் தொழிற்சாலைகளுடன் கூட்டு முயற்சி ஆகியவற்றில் நுழைவது குறித்த நடைமுறைகளை வகுப்பதில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையே விரிவான பாதுகாப்பு நடைமுறை குறித்த பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

மேற்காசியாவில் பல்வேறு பிராந்தியங்களில் நிலவும் கொந்தளிப்பான குழப்ப நிலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, மற்ற நாடுகளின் கொள்கைகள், இறையாண்மை ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை போன்ற சமன்பாடான அணுகுமுறை தேவை என்று கூறினார்.

“இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இந்தியா சிறப்பான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பெருமளவு இந்தியர்கள் வசிக்கின்றனர். எனவே, இந்தப் பிராந்தியத்துக்கு மிகவும் அவசியமான அமைதி, பாதுகாப்பை கொண்டுவர,  பேச்சுவார்த்தையில் அனைத்து தொடர்புடையவர்களும் பங்கேற்பதை ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்” என்று அவர் கூறினார்.

தற்போதைய உலகப் பொருளாதார நிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “உலகப் பொருளாதார நிலை,  இந்தியா போன்ற பெரிய வளரும் நாடுகள் உருவாக்கிய பாதையை வெகுவாக சார்ந்துள்ளன. செப்டம்பர் மாதம் ஐ நா பொதுச்சபைக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையில் குறிப்பிட்டது போல, அனைவரது வளர்ச்சிக்கும், ஒவ்வொருவரின் நம்பிக்கையுடன் ஒருமித்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

“பொருளாதார நிலையற்ற தன்மை, சமன்பாடற்ற பலமுனை வர்த்தக முறைகளால் ஏற்பட்ட விளைவாகும். ஜி-20 நாடுகளுக்குள் இந்தியாவும், சவுதி அரேபியாவும் சமத்துவமின்மையைக் குறைக்கவும், நீடித்த வளர்ச்சியை மேம்படுத்தவும் ஒன்று சேர்ந்து பாடுபட்டு வருகின்றன. ஜி-20 உச்சிமாநாட்டை அடுத்த ஆண்டு சவுதி அரேபியா நடத்தப்போவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா சுதந்திரமடைந்த 75-வது ஆண்டான 2022-ஆம் ஆண்டு இந்தியா அந்த உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மேற்கத்தியப் பொருளாதாரங்களில் தற்போது நிலவும் தேக்கநிலை, அதில் இந்தியா – சவுதி அரேபியாவின் பங்கு என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் “தொழில் நடத்த உகந்த சூழலை உருவாக்க இந்தியா பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் நிலைத்தன்மைக்கான முக்கிய ஊக்குவிப்பாக நாங்கள் திகழ்கிறோம். தொழில் தொடங்க சாதகமான எங்களது சீர்திருத்தங்கள், முதலீட்டுக்கு உகந்த முன்முயற்சிகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை உலக வங்கியின் தொழில் நடத்த சாதகமான நாடுகளின் தரவரிசையில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. தரவரிசையில் 2014-ஆம் ஆண்டு 142-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ல் 63-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது” என்று கூறினார்.

“இந்தியாவில் தொடங்கு, டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, தூய்மை இந்தியா, பொலிவுறு நகரங்கள், மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகள் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அதேபோல, சவுதி அரேபியாவும் 2030 தொலைநோக்குத் திட்டத்தின் ஒருபகுதியாக சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கு பெருமளவில் எண்ணெய் விநியோகிக்கும் சவுதி அரேபியாவுடன் நீண்டகால எரிசக்தி உறவு குறித்து குறிப்பிட்ட அவர், “சவுதி அரேபியாவிடமிருந்து இந்தியா அதன் இறக்குமதியில் 18 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெயை வாங்குகிறது. இதன்மூலம், எங்களுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை வழங்கும் இரண்டாவது நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது.  வெறும் விற்பவர் – வாங்குபவர் என்ற உறவுக்கு மாறாக நாங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற அளவுக்கு நெருங்கியுள்ளோம். இதன்மூலம், இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் சவுதி அரேபியா முதலீடு செய்யவுள்ளது” என்றார்.

“எங்கள் எரிசக்தி தேவையில் நம்பகமான முக்கிய ஆதாரமாக சவுதி அரேபியா முக்கிய பங்கு வகிப்பதை நாங்கள் மதிக்கிறோம்.  நிலைத்தன்மையான எண்ணெய் விலைகள் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக, வளரும் நாடுகளுக்கு  மிகவும் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். சவுதியின் ஆரம்கோ நிறுவனம் இந்தியாவின் மேற்குக் கரையில் முக்கிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோக் கெமிக்கல் திட்டத்தில் பங்கேற்கவுள்ளது.  இந்தியாவின் பெட்ரோலிய ஆதாரங்களில் ஆரம்கோ பங்கேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்”.

அரசு அறிவித்துள்ள பொலிவுறு நகரங்கள் திட்டத்தில், சவுதி அரேபியா பங்கேற்பதை இந்தியா விரும்புகிறதா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி “எங்கள் உள்கட்டமைப்புத் திட்ட முதலீடுகளில் இந்தியா – சவுதி அரேபியா இடையிலான ஒத்துழைப்பும் ஒரு முக்கிய பகுதியாகும். பிப்ரவரி மாதம் சவுதி பட்டத்து இளவரசர் இந்தியா வந்தபோது, இந்தியாவில் பல்வேறுத் திட்டங்களில் 100 பில்லியன் டாலர் கூடுதலாக முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்” எனத் தெரிவித்தார்.

“பொலிவுறு நகரங்கள் திட்டம் உட்பட எங்கள் உள்கட்டமைப்புத் திட்டங்களில் சவுதி அரேபியா அதிக அளவில் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் முதலீடு செய்ய சவுதி அரேபியா ஆர்வம் கொண்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்”.

“எரிசக்தி தவிர மற்ற துறைகளில் இந்தியாவும், சவுதி அரேபியாவும் ஒத்துழைக்கும் துறைகள் பற்றி பேசிய பிரதமர், இந்தப் பயணத்தின்போது இந்தியாவும், சவுதி அரேபியாவும் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

“இந்திய வம்சாவளியினர் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வசதியாக சவுதி அரேபியாவில் ரூபே அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய முன்முயற்சிகள் தொடங்கப்படவுள்ளன. இ-மைக்ரேட், இ-தவ்தீக் இணையதளங்களை ஒருங்கிணைத்து இந்திய தொழிலாளர்களை குடியமர்த்தும் நடைமுறைகளைத் தொடங்குவது, நிறுவனங்களின் பயிற்சிக்கான உடன்படிக்கை செய்துகொள்வது ஆகியவை இதற்கு பயன்படக்கூடியதாகும்”.

“இந்தியா உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையங்களுக்குப் பெயர் பெற்றதாகும். பல்வேறு துறைகளில் சவுதி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்து வருகிறோம்”.

சவுதி அரேபியாவில் உள்ள வம்சாவளியினருக்கு விடுத்துள்ள செய்தியில், “சுமார் 26 லட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியாவை தங்களது இரண்டாவது இல்லமாக கொண்டுள்ளனர்.  அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பங்களித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பல இந்தியர்கள் ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்வதுடன் தொழில் ரீதியாகவும்  பயணம் செய்கின்றனர்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

“எனது சக குடிமக்களுக்கு நான் அளிக்கும் செய்தி, சவுதி அரேபியாவுக்கு நீங்கள் செய்துள்ள பங்களிப்பு குறித்து உங்கள் நாடு பெருமிதம் கொள்கிறது. உங்களது கடின உழைப்பும், ஈடுபாடும் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளுக்கு நல்லெண்ண நடவடிக்கையாக திகழ்கின்றன” என்று அவர் தெரிவித்தார்.

“சவுதி அரேபியா உடனான நமது உறவுகளுக்கு நீங்கள் தொடர்ந்து உறுதுணையாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.  இரு நாடுகளுக்கும் இடையே பன்னெடும் காலமாக நிலவிவரும் வரலாற்று ரீதியிலான உறவுகள் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை அடிப்படையாக கொண்டது”.

தற்போதைய பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, மன்னர் சல்மானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.  பட்டத்து இளவரசருடன் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும். மத்தியக் கிழக்கில் முக்கிய பொருளாதார அமைப்பான மூன்றாவது எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பின் கூட்டத்தில் மோடி முக்கிய உரையாற்றுவார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகள், வர்த்தகம் மற்றும் தொழில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், விவசாயம், விமானப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, வீட்டு வசதி, நிதிச்சேவைகள், பயிற்சி மற்றும் திறன் உருவாக்கம், கலாச்சாரம், மக்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை விரிவாக்கவும், மேலும் வலுப்படுத்தவும் பிரதமர் மோடியின் பயணம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைகளில் அரசுகளுக்கு இடையே சுமார் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இந்தப் பயணத்தால் ஏற்படும் பயன்களில் மிக முக்கியமான ஒன்றாக இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தவிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் வரிசையில், சவுதி அரேபியாவுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்துகொள்ளும் 4-வது நாடாக இந்தியா விளங்கும்.

 இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில் அரசியல், பாதுகாப்பு, கலாச்சாரம், சமுதாயம். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் தலைமையில் பொருளாதாரம் மற்றும் முதலீடு ஆகியவற்றைக் கொண்ட இரண்டு இணை வழிகளை பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சில் கொண்டிருக்கும்.

எரிசக்திப் பாதுகாப்பு, சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவில் முக்கிய அம்சமாக திகழ்கிறது.  இந்தியாவின் நீண்டகால எரிசக்தி விநியோகத்தில் சவுதி அரேபியா நம்பகமான முக்கியப் பங்கு வகிப்பதை இந்தியா பாராட்டியுள்ளது.  இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 18 சதவீதத்தையும், திரவ எரிவாயு தேவையில் 30 சதவீதத்தையும் சவுதி அரேபியா விநியோகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே வாங்குபவர், விற்பவர் என்ற உறவை மாற்றி, பரஸ்பர கூட்டுச்செயல்பாடு, இணைச்சார்பு அடிப்படையில் மேலும் விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் இருநாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன.

Source : PIB

Previous articleகியார் புயலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை தீவிரப்படுத்தியுள்ளது
Next articleGobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் மோடி! கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்