கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படாமல் இருந்தது.
தற்போது 4வது முறையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ம் தேதியிலிருந்து தேர்ந்தெடுத்த 15 வழித்தடங்களில் மட்டும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து துறை அமைச்சர் ப்யூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் பயணிக்க ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ரயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி அல்லாத 2ம் ஆம் வகுப்பு பெட்டிகளை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.