ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

Photo of author

By Anand

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இங்கு நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கிறது.

இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே நடந்த முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பெண்கள் அணியின் கேப்டன் லூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய லிஸ்லி லீ ரன் எதுவும் எடுக்காமலும் (0), லாரா 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தொடர்ந்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் மரிஷனி கப் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் கோஸ்வாமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ப்ரியா மற்றும் ஜேமிமா தென் ஆப்பிரக்காவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜேமிமா 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 75 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற தொடக்க வீராங்கனை பிரியாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.