உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

கடந்த 24ஆம் தேதி முதல் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைன் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது.பலவிதமான கட்டிடங்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டிருக்கின்றன.பல முக்கிய நகரங்கள் ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 27வது நாளாக தொடர்ந்து வருகின்ற சூழ்நிலையில், இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நிலைமை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் மூலமாக உரையாற்றினார் என்று சொல்லப்படுகிறது.

இந்த உரையாடலின்போது ரஷ்யா, உக்ரைன், உள்ளிட்ட நாடுகளுக்கிடையேயான நெருக்கடியை தனிக்கும் விதமாகவும், நிறுத்தும் விதமாகவும், பேச்சுவார்த்தைக்கு திரும்புதல் மற்றும் தூதரக ரீதியான பாதைக்கு செல்வது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மறுபடியும் வலியுறுத்தினார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

சர்வதேச சட்டம், அனைத்து நாடுகளுக்கிடையேயான பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் இந்தியாவின் நம்பிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அப்போது எடுத்துரைத்திருக்கிறார்.

அதோடு இருதரப்பு நலன்கள் தொடர்பாகவும், இரு தலைவர்களும், விவாதித்ததாக சொல்லப்படுகிறது. வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடுகள், பாதுகாப்பு, உட்பட இந்தியா, பிரிட்டன் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும், இருநாட்டு தலைவர்களும் விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மிக விரைவில் இந்தியா வர வேண்டும் என்று போரிஸ் ஜான்சனுக்கு இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.