பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீரென மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையில் இருந்தே அவர்கள் இருவரும் காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ள இந்திய அரசு காணமல் போனவர்கள் குறித்த பெயர்கள் மற்றும் அவர்களின் பதவிகள் என எதையும் தெரிவிக்கவில்லை. இது இரு நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வேறு எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டிற்காக டில்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பிரிவில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் உளவு பார்த்ததாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் நாடு கடத்தப்பட்டனர்.
இந்த சம்பவமானது இரு நாட்டிற்கும் இடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பு அதிகாரியை ஐஎஸ்ஐ அமைப்பினர் பின் தொடர்ந்ததாக கூறப்பட்டது. மேலும் இது குறித்த வீடியோவும் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீர் மாயமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.