கொரோனா தடுப்பூசி – பிரிட்டன் நிறுவனத்துடன் இனைந்து மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனம்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சி உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு கொரோனா மருந்து தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் ரேணு ஸ்வரூப் “கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க, பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. தற்போதைய நிலையில், எட்டு வகையான தடுப்பூசிகள், பல்வேறு கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவை, தடுப்பூசி தயாரிப்பதற்காக, மருந்து நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகின்றன. கோடிக்கணக்கான பணத்தையும் செலவிட்டு வருகின்றன.கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் முனைப்பில், பல்வேறு இந்திய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, ‘செரம்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், பிரிட்டன் மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இவ்வாறு பல இந்திய நிறுவனங்கள், தடுப்பூசியை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பெறும் முயற்சியில் உள்ளன.இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைத்து, அந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை வரவேற்க உயிரி தொழில்நுட்பத் துறை தயாராக உள்ளது. மருத்துவப் பரிசோதனை வசதிகள் மற்றும் நிர்வாக ஒப்புதல்கள் அளிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.