மக்கள் சொல்வதை கேளுங்க; எல்லை விவகாரத்தில் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்!

Photo of author

By Jayachandiran

இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே எல்லை பகுதியில் ஏற்பட்ட சிக்கல் இன்னும் தீரவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டை மீறி சீன ராணுவத்தினர் நுழைந்த காரணத்தாலே இந்ந பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருதரப்பு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி படிப்படியாக எல்லை ராணுவ குவிப்பை விலக்கிக்கொள்வதாக கூறப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லை பகுதியில் ஆய்வு செய்வதாக கூறப்பட்ட நிகழ்வு ரத்து செய்யப்பட்டு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் எல்லை பகுதிக்கு சென்றார். இதன்பின்னர் எந்த அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமை, பாதுகாப்பு ஆய்வு செய்தார்.

மோடியின் ஆய்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், சீனா எங்கள் நிலத்தை பறித்துவிட்டது என லடாக் மக்கள் கூறுகிறார்கள். பிரதமர் மோடி யாரும் நமது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்கிறார். இதில் யாரோ ஒருவர் பொய் சொல்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இதேபோல் மற்றொரு பதிவில் லடாக் மக்கள் சொல்வதை கேளுங்கள், இதை புறக்கணித்தால் மிகப்பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.