INDIA-PAKISTAN: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பாதுகாப்பு பதற்றம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் மூன்று முக்கியமான விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய ஒத்துழைப்பு மையங்களான நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி) ஷோர்கோட்டில் உள்ள PAF ரஃபிகி தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரிட் விமான தளம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நூர் கான் தளம் பாகிஸ்தானின் முக்கியமான VIP போக்குவரத்து மையமாகவும், தேசிய அவசர நடவடிக்கைகளுக்கான முக்கிய கட்டுப்பாட்டு மையமாகவும் விளங்குகிறது. இங்கு உள்ள ஏர் மொபிலிட்டி கமாண்ட் என்பது நாட்டின் முழுமையான விமானப்படை இயக்கங்களை கண்காணிக்கின்றது. மேலும் இது பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து செயல்படுவதால் இராணுவ மற்றும் சிவில் போக்குவரத்து ஒருங்கிணைப்பு இங்கே நடைபெறுகிறது.
இதேபோல் ஷோர்கோட்டில் உள்ள ரஃபிகி தளம் JF-17 தண்டர் மற்றும் F-7PG போர் விமானங்களுக்கு பயிற்சி மற்றும் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் முக்கிய போர் தளமாகும். இது பாகிஸ்தானின் கிழக்கு, மேற்குக் களங்களுக்கு உடனடி விமான ஆதரவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
முரிட் தளத்தில் ஏவுகணை செயல்பாடுகள் ரேடார் கண்காணிப்பு மற்றும் மின்னணு போர் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதுவும் தாக்குதலில் சீர்குலைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலால் பாகிஸ்தானின் விமான பாதுகாப்பு அமைப்பில் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேலும் பதற்றங்களை உருவாக்கும் அபாயம் காணப்படுகிறது.