என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர்
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற நாள் முதல் தன்னுடைய தொகுதி மக்களின் பிரச்சனைகள் என்னவென்று ஆராய்ந்து ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறார்.மேலும் சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய அவர் தனது தொகுதி மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் குறிப்பாக இந்த பகுதிகளில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருவதால் அதற்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.அதே போல இந்த பகுதிகளில் தேங்காய் நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழில் நடைபெற்று வருவதால் அந்த தொழில் முன்னேற்றம் குறித்தும்,இந்த இரு தொழில்களிலும் ஈடுபட்டு வருபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
அதில் உள்ளூரில் வெள்ளி நகைகளை செய்ய வண்டிகளில் எடுத்து செல்லும் போது காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை பிடித்து குற்றவாளிகளை போல விசாரிப்பதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் சட்டமன்றத்தில் பேசியது போலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் இதுவரை சாதாரண மக்களுக்கு மட்டுமே பிரச்சனையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் தற்போது சட்டமன்ற உறுப்பினரான இவரையே மிரட்டும் வகையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள் தமிழக டிஜிபிக்கு புகார் அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது.கயிறு லோடு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும்,குடித்துவிட்டு விட்டு செல்பவர்களின் வாகனங்களை பிடுங்கி கொண்டும் மிரட்டி அளவுக்கு அதிகமான அபராதத்தை விதிப்பதாகவும் கேள்வி பட்டு அதை குறைக்குமாறு கேட்ட தன்னை ஒரு எம்.எல்.ஏ என்றும் பார்க்காமல் ஒருமையில் பேசியதாக இரும்பாலை காவல் ஆய்வாளர் சந்திரலேகா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் MLA என்றாலும் மந்திரி என்றாலும் என்னை ஒன்றும்புடுங்க முடியாது.நீ உன் வேலையை பார்.எந்த பிரச்சனையானாலும் என்னால் சந்திக்க முடியும்.வை போனை என ஆய்வாளர் தன்னை ஒருமையில் தரக்குறைவாக பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.இதுமட்டுமல்லாமல் இவர் இதற்கு முன் பணிபுரிந்த இடங்களில் வருமானத்தை மீறி அளவுக்கு அதிகமாக லஞ்சமாக கோடி கணக்கில் சம்பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முழுமையான விசாரணை வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.