தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம்!! பாயிண்டை பிடித்த விஜய்!!

Photo of author

By Divya

TVK: தவெக கட்சி கொடி மற்றும் பாடலை தளபதி விஜய் பனையூர் அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று முன்னரே அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இன்று(ஆகஸ்ட்22) பனையூரில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அவர்கள் கட்சியின் பெயரை  அறிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா அல்லது யாருக்காவது ஆதரவு அளிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்றும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காது என்றும் கூறி 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலே எங்களுடைய குறிக்கோள். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று விஜய் அவர்கள் அறிவித்தார்.

கட்சி தொடங்கியாச்சு ஆனால் கட்சியின் கொடி என்ன என்று இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னரே நடிகர் விஜய் கட்சிக் கொடியை ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளார் என்று தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து நேற்று(ஆகஸ்ட்21) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி கட்சிக் கொடி, கட்சியின் பாடல் ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என்று அறிக்கை விட்டு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் நாளான இன்று(ஆகஸ்ட்22) நடிகரும் தலைவருமான விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து பனையூரில் இருக்கும் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். நடிகர் விஜய் அவர்களை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் வரவேற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி அறிமுகம் செய்யும் விழாவிற்கு கட்சியை சேர்ந்த 300 நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் நடிகர் விஜய் அவர்களின் தாய் ஷோபா அவர்களும் தந்தை எஸ்.சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் உறுதிமொழியை படித்து பின்னர் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். ஏற்கனவே தகவல்கள் வெளியானது மாதிரியே கட்சிக் கொடியில் இரண்டு பிளிரும் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. கட்சியின் கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றது.

கொடியை அறிமுகம் செய்த கையோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் பனையூர் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் கட்சியின் பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.