அசுர வளர்ச்சியை கொடுத்த ஐஆர்சிடிசி நிறுவனம்! ஒரே மாதத்தில் 200 சதவீத லாபம்
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி நிறுவனம் சமீபத்தில் IPO மூலமாக பங்கு வெளியீட்டை தொடங்கியது. ஐஆர்சிடிசி நிறுவனத்தின் இந்த பொதுவெளியீடு ஆரம்பம் முதலே களைகட்டி வருகிறது. இந்த பங்கு இந்திய பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட ஒரு மாதத்திலேயே 200 சதவிகித லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் விலையானது கடந்த புதன் கிழமையன்று அதனுடைய வராலாற்று விலை உயர்வான 981.35 ரூபாயை தொட்டது. இந்த நிலையிலேயே, IPO மூலம் இந்த நிறுவனத்தின் பங்குகள் வெளியிட்ட சுமார் 31 நாட்களில் 206 சதவிகித லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு தொடங்கி, தற்போது வரை இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இவ்வாறு தொடர் ஏற்றத்தை கொடுத்து வரும் இதை அசுர வளர்ச்சி என்று தான் கூற வேண்டும்.
சிறு சிறு சில்லறை முதலீட்டாளர்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை கையிருப்பு உள்ளவரை போதுமான அளவில் இந்த பங்கினை வாங்கி போட்டார்கள். இதனால் தான் 2.01 பங்குகளுக்கு 225.09 கோடி விண்ணப்பங்கள் வந்தது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி இந்த நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டது. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் IPO வில் இந்த பங்கானது 320 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில், பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட தொடக்கத்திலேயே அதன் விலையானது 725 ரூபாய் மேல் வர்த்தகமானது தான்.
இந்த நிலையில் தொடர்ச்சியான ஏற்றம் கண்டு வரும் இந்த நிறுவனம்,இன்று ஒரு மாத காலத்திற்கு பின்பு, தற்போது 22 ரூபாய் வீழ்ச்சி கண்டு 910 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த புதன் கிழமையன்று இதன் புதிய உச்சமான 981 ரூபாய் வரை சென்று அதிலிருந்து சற்றே சரிந்துள்ளது. இதன் படி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் ஒரு மாதத்திலேயே 206 சதவிகித லாபத்தை கண்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் இந்திய பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட நாளன்று 10,736 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நவம்பர் 13 ஆம் தேதியன்று 14,908 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த புதன் கிழமையன்று இந்த பங்கின் விலையானது 5.20 சதவிகிதம் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த நிலையில் சந்தை முடிவில் 932.80 ரூபாயாகவும் முடிவடைந்தது. இதன் படி இதன் சந்தை மூலதனம் தற்போது 15,575 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
அரசுக்கு முழுவதும் சொந்தமான இந்த நிறுவனம் 100 சதவிகித பங்கினை வைத்திருந்த நிலையில், தற்போதைய நிலையில் 12.6 சதவிகித பங்கினை விற்றுள்ளது. நிலையில் இந்த பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பின்பு அரசின் பங்கு 87.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் அரசின் செயல்பாடுகளினால் இந்த நிறுவனத்தின் இலாபம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் பல சலுகைகள் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வரும் காலத்தில் பயணிகளின் டிக்கெட் விலை அதிகரிக்கலாம், மேலும் இது மட்டுமல்லாமல் இந்த நிறுவனத்திற்கு போட்டி நிறுவனம் என்றும் எதுவும் கிடையாது என பல சாதகமான அம்சங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது யாரும் எதிர்பாராத அளவு ஏற்றம் கண்டுள்ளது. இது போன்ற பல காரணிகளால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்று வரை வலுவான நிலையிலேயே உள்ளது.மேலும் இந்த நிறுவனத்தின் விலையானது தொடர்ந்து உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.