பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

சென்னை கிண்டி மதுவின்கரையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக இன்றைய தினம் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக மிக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் பிரச்சனையே இல்லாத ஒரு நகரமாக சென்னை மாற்றப்படும். 10 வருடகாலமாக செயல்படாமல் இருக்கும் தண்ணீர் தொட்டிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியன்.

தடுப்பூசி தொடர்பாக உரையாற்றிய அவர் கேரள மாநில எல்லைப் பகுதியில் இருக்கின்ற 9 கிராமங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. அந்த பகுதியில் 100% தடுப்பூசி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசிடம் வலியுறுத்த ப்பட இருக்கிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

அதோடு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறந்தவுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது என சொல்லப்படுவது தவறான விஷயம். பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவது என்பது சாத்தியமற்ற நிகழ்வு ஏற்கனவே நோய்த்தொற்று இருப்பவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அது கண்டறியப்பட்டு இருக்கிறது. தற்சமயம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், இதுவரையில் 5 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கல்லூரி மாணவி ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.