கொரோனா அறிகுறி தென்படாத நபர்களிடம் தொற்ற மற்றவருக்கு பரவுவது மிக அரிது என உலக சுகாதார அமைப்பின் தொற்று நோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் மருத்துவர் மைக்கேல் ராய் என்பவர் கொரோனா குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இவ்வாறு இருக்கையில், சீனாவில் கொரோனா வைரஸ் சீனர்களால் எவ்வாறு கட்டுப்படுத்தபட்டது என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனாவின் இரண்டாவது கட்டத்தை சமாளிக்க நாம் என்ன செய்யப் போகிறோம், என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் மத்திய பகுதிகளில் நோயின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருவதாகவும், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்டவை இன்னும் பாதிப்புகளில் இருந்து மீளாமல் தொடர் அழிவுகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தற்போது பிரேசில் கொரோனா நோயின் மையமாகத் திகழ்வதாக தெரிவித்த அவர், இத்தாலியை காட்டிலும் அதிக உயிரிழப்புகள் தற்போது பிரேசிலில் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
எனவே கொரோனா நோய்த் தாக்கத்தின் பாதிப்பை புரிந்து பிரேசிலியர்கள் செயல்பட வேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல் தொற்றுநோயியல் நிபுணரான மரிய வான் ஜெர்க்கெவ் என்பவரும் கொரோனா குறித்து தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், இதுவரை கொரோனாவை கண்டறிந்து உள்ள பல நாடுகள் அறிகுறி அற்றவர்களை கண்டறிந்துள்ளார்களே தவிர, அவர்களிடமிருந்து கொரோனா பரவுகிறதா என்பதை கண்டறியவில்லை. பெரும்பாலான முடிவுகளின் அடிப்படையில் தெரியவருவது என்னவென்றால், கொரோனா அறிகுறி தென்படாத நபர்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவது மிகவும் அரிதான ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.