தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து சாதித்தவர்கள் பலருண்டு. அந்த வகையில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் பின் வெள்ளித்திரைக்கு வந்து காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகர் ஆகவும் மக்களின் மனதில் நீங்காவிடம் பிடித்தவர் நடிகர் மயில்சாமி அவர்கள்.
கடந்த ஆண்டு மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார். இவர் மிகப்பெரிய எம்ஜிஆர் ரசிகன் மட்டுமின்றி அவருடைய வழிகளை பின்பற்ற தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் ஆவார். எம்ஜிஆர் எவ்வாறு உதவும் மனப்பான்மையைக் கொண்டிருந்தாரோ அதே போன்று தன்னுடைய வாழ்வில் உதவி என்று கேட்பவர் மட்டுமின்றி யாருக்காவது உதவி தேவைப்பட்டால் கூட ஓடி சென்று உதவும் மனப்பான்மையோடு வாழ்ந்தவர் நடிகர் மயில்சாமி.
எம்ஜிஆரின் உடைய படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பொழுது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை மயில்சாமி பகிர்ந்த வீடியோவானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-
எம்ஜிஆரின் உடைய நாடோடி மன்னன் திரைப்படமானது ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பொழுது நடிகர் மயில்சாமி மற்றும் அவருடைய நண்பரான இதயக்கனி விஜயன் இருவரும் படம் பார்ப்பதற்காக சென்று இருக்கின்றனர். திரைப்படம் மதிய காட்சி என்பதால் 1 மணி அளவில் படம் துவங்கி இருக்கிறது.
மயில்சாமி மற்றும் அவரது நண்பர் என அனைவரும் படத்தினை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சரியாக 2 மணி அளவில் ஒரு பெண் தான் கொண்டு வந்த சாப்பாட்டு கேரியரை எடுத்து வைத்து தட்டில் சாதம் போட்டு சாப்பிட்டு கொண்டே படம் பார்த்து இருக்கிறார். ஏன் இந்த பெண் இவ்வாறு செய்கிறார் என்று யோசித்தவரே மீண்டும் படத்தினை பார்க்க துவங்கியுள்ளார் நடிகர் மயில்சாமி அவர்கள்.
அடுத்த நாள் மீண்டும் திரைப்படத்திற்கு மதியக்காட்சிக்கு நடிகர் மயில்சாமி சென்ற பொழுது முன்பு நடந்தது போலவே அந்தப் பெண் மீண்டும் சரியாக 2 மணி அளவில் வீட்டில் இருந்து உணவை கட்டிக் கொண்டு வந்து திரையரங்கில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டே படம் பார்த்திருக்கிறார்.
ஏன் இவ்வாறு செய்கிறார் என்று மயில்சாமி அப்பெண்ணிடம் கேட்ட பொழுது, தனக்கு எப்பொழுதும் 2 மணி அளவில் உணவு அருந்தியே பழகி விட்டதாகவும், எம்ஜிஆரின் மீது தீராத பற்று உள்ளதால் அவருடைய திரைப்படத்தை காண வேண்டும் என்ற எண்ணத்தில் உணவை திரையரங்கிற்கு எடுத்து வந்து உணவருந்தியதாகவும் அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே இவர் மிகுந்த எம்ஜிஆர் ரசிகன் என்பதை தாண்டி , இந்தப் பெண் எம்ஜிஆரின் மீது கொண்டுள்ள பற்றை கண்டு நெகிழ்ந்து போனதாக தெரிவித்திருக்கிறார்.