செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி? முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!
அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்ததாக இணைய போகும் கட்சி பாஜக தான் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகர கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் வகையில் அதிமுக சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி உரையாற்றினார். அதில் அதிமுக தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அவர்கள் கழகமே கோவில் என இருந்து வருகின்றனர். மேலும் தொண்டர்களுக்காகவே உள்ள இயக்கம் தான் அதிமுக. அதனால் தான் யாரும் கூறுவதற்கு முன்னால் கண்டன பொதுக் கூட்டத்தை அறிவித்தார் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் எனக் கூறிய அவர் மேலும் கரூர் தற்போது ஒரு தனிமாநிலமாக மாறி வருகிறது. அங்கு அராஜகம் கட்டவிழ்த்து ஆடுகிறது. திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு அனுபவித்து வருகின்றனர். இன்னும் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமோ??
அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்ததாக இணைய போகும் கட்சி பாரதிய ஜனதா தான் இதை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். திமுகவும் சரி ஸ்டாலின் குடும்பமும் சரி அவரை முக்கியமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரைப் புரிந்து கொள்ள 40 ஆண்டு காலமாகும். அவர்கள் அனைவரையும் ஒரு குழியில் தள்ளிவிட்டு அவரது அடுத்த இலக்கு மற்றும் அவரின் திட்டமே அடுத்த முதல்வர் ஆவது தான். இதை முதல்வருக்கு எச்சரிக்கையாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஏனெனில் இங்கு நிகழும் எந்த நிகழ்வும் உளவுத்துறை முதல்வரின் கண்காணிப்புக்கு கொண்டு செல்வதில்லை. இருக்கின்ற உளவுத்துறை செந்தில் பாலாஜியின் உளவுத்துறை. அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் அங்கே அறிக்கையாக போடுவார்கள். என செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகளை அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது. இப்போதும் அப்படித்தான் உள்ளது. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் குடும்பம் தான் ஆட்சி செய்யும். இப்போது மின்சாரத் துறையில் புதிய வகை ஊழலுக்கு வழிவகை செய்து கொண்டுள்ளனர். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்க திமுக அரசு முயன்று வருகிறது என இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உரையாற்றினார்.