10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000/- ஊக்கத்தொகை தரப்படுகிறதா?

Photo of author

By Divya

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000/- ஊக்கத்தொகை தரப்படுகிறதா?

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் பெயரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 75% மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்டுகிறது என்ற தகவல் தான் அது.

சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்:

“அனைவர்க்கும் வணக்கம்.10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் Scholarship ஒன்றை அறிவித்துள்ளார்.75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்ப மாணவர்களுக்கு ரூ.10,000மும்,85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பப் படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும்.

இந்த பதிவை தவிர்த்துவிடாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.ஏனெனில் இந்த செய்தி நமக்குத் தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே.

உயர் நீதிமன்ற உத்தரவு எண்:

WP (MD) NO. 20559/2015″

இந்த ஊக்கத்தொகை குறித்த தகவலின் உண்மை தன்மையை ஆராயாமல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்தில் சக மாணவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.ஆனால் இந்த தகவல் முற்றுலும் பொய்யானது என்று பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி மத்திய அரசின் பள்ளி மாணவர்களின் ஊக்கத்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் எந்த ஒரு ஊக்கத்தொகை திட்டமும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவருகிறது.மேற்படிப்பை தொடங்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மாணவர்கள் இது போன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டும்.

மத்திய அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது தான்.அதற்கு மத்திய அரசு நடத்தும் சிறப்பு தேர்வில் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது.