புதுச்சேரியில் சென்ற சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் அரசியல் பரபரப்பு இன்றைய தினம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 30 சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மூன்று நியமன சட்டசபை உறுப்பினர்கள் என்று இருக்கும் புதுச்சேரி சட்டசபையில், காங்கிரஸ் கட்சி 19 சட்டசபை உறுப்பினர்கள் உடன் ஆட்சியில் அமர்ந்தது.
இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒரு சட்டசபை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதையடுத்து ஒரு திமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் உள்பட ஆறு நபர்கள் பதவி விலகி இருக்கிறார்கள். இதற்கிடையில் புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் நாராயணசாமி தன்னுடைய பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இந்தநிலையில், இன்று காலை 10 மணி அளவில் சட்டசபை கூட இருக்கிறது. ஆகவே நம்பிக்கை வாக்கெடுப்பை காணொளி மூலமாக பதிவுசெய்யவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
இப்பொழுது புதுச்சேரி சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 26 ஆக இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் 12 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அதேபோல எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் என் ஆர் காங்கிரஸ் கட்சியில் 14 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், நியமன உறுப்பினர்கள் மூன்று நபர்களின் வாக்குகளை சபாநாயகர் ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
இந்த நிலையில், இன்றைய தினம் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி புதுவை மாநிலத்தில் நீடிக்குமா? அல்லது கலைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.