தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள பாரத் சமிதி கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு வழங்கியுள்ளதால் அந்த கட்சி தனி வழியில் பயணம் செய்கிறதா என்ற சந்தேகம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிகுமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.
சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றியது. ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாற்று அணிக்கு சென்றாலும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்தில்லை.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இணைக்க திமுக தயாராக உள்ளதாக தெரிகிறது. ஆகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தனி பாதையில் பயணம் செய்ய துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக வரும் 11ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்த இருப்பதாக தெரிகிறது.
அதேபோல மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டிக்கும் விதமாக சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றதாக தெரிகிறது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக திமுகவின் தலைமையிடம் இந்த கட்சிகள் கலந்தாலோசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆகவே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை தேசிய அளவில் ஒன்றிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதலமைச்சர் பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்ற அந்தக் கட்சியின் துவக்க விழாவில் திமுக தன் சார்பாக யாரும் பங்கேற்கவில்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
அந்த சமயத்தில் மற்ற மாநில தலைவர்களிடம் திருமாவளவனை சந்திரசேகர ராவ் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ஆகவே திருமாவளவன் சந்திரசேகர ராவ் தலைமையில் ஏற்படும் அணியில் இடம் பெற விரும்புகிறார் என்பதையும், காங்கிரஸ் கட்சியின் அணியில் நீடிக்க அவருக்கு விருப்பமில்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டதாக ஆளும் திமுக நினைக்கிறது.
சரி இது ஒரு புறம் இருக்க திமுக, பாட்டாளி மக்கள் கட்சியை தன்னுடைய கூட்டணி இணைப்பதற்கு தயாராகி விட்டது என்று தெரிவிக்கிறார்கள் அது தொடர்பாக பார்ப்போம்.
பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட சபதம் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளுக்கும் எங்களுடைய ஆதரவு கிடையாது என்று தொடக்கத்திலேயே தெரிவித்தது. ஆனால் திடீரென்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.
இருந்தாலும் அதிமுக தலைமை எப்போதும் பாமகவின் கருத்துக்கும், அதன் உணர்வுக்கும் மதிப்பளித்தது. அதோடு தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக விளங்கும் மருத்துவர் ராமதாஸிடம் அவ்வப்போது அதிமுக செயல்படுத்தும் பல திட்டங்களில் ஆலோசனை கேட்டு நடந்தது.
ஆனால் திமுக அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்காது அந்த கட்சியை பொறுத்தவரையில் பாட்டாளி மக்கள் கட்சி தன்னுடைய கூட்டணிக்குள் வந்துவிட்டால் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் செய்வார்கள். மேலும் இரு கட்சிக்கும் கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இவ்வளவு நாள் திமுக கூட்டணியில் நிலைத்திருக்கிறது என்றால் சற்றேறு குறைய திமுகவின் கொள்கையும், திருமாவளவனின் கொள்கையும் ஒன்றுதான். அதன் அடிப்படையில் தான் அந்த கட்சி இவ்வளவு நாள் திமுகவின் கூட்டணியில் நிலைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அதேபோல மேலோட்டமாக பார்ப்பதை விட சற்று உற்று நோக்கினால் அதிமுகவின் கொள்கையும் பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையும் சற்று ஒத்துப்போகும் .
உதாரணமாக கடவுள் நம்பிக்கை என்று எடுத்துக் கொண்டால் இந்த இரு கட்சிகளுக்குமே கடவுள் மீது அபார நம்பிக்கை உண்டு. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மற்ற சமயங்களை சார்ந்த வழிபாடு தொடர்பாகவும், மற்ற சமயங்களில் இருக்கின்ற கொள்கைகள் தொடர்பாகவும் இந்த இரு கட்சிகளுமே விமர்சனம் செய்தது கிடையாது.
மேலும் மக்களுக்கு எது நல்லது என்று சிந்திக்கும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி அதே நேரம் மக்களுக்கு நல்லது என்று தெரிந்தால் அதனை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் உடனடியாக செய்து முடிக்கும் கட்சி அதிமுக.
இப்படி கொள்கை பிடிப்புடன் இருப்பதால்தான் பாட்டாளி மக்கள் கட்சியும், அதிமுகவும் கூட்டணியில் நீடிக்கின்றன.
ஆனால் திமுகவும் பாமகவும் நேர் எதிர் கொள்கையை கொண்ட கட்சிகள் ஆகவே இந்த கட்சிகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பில்லை. அப்படியே ஒன்றிணைந்தாலும் அந்த கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது சந்தேகம் தான்.
ஆனால் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிர ஸ் போன்ற எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க தெலுங்கானா முதலமைச்சர் முன்வர வேண்டும் என்று தான் பாரத் ராஷ்ட்ரிய ஸமிதி கட்சி துவக்க விழாவில் திருமாவளவன் பேசியுள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியை பாட்டாளி மக்கள் கட்சி நெருங்கி வருவதாக சிலர் குறிப்பிட்டு வருகிறார்கள். அதோடு தேசிய அளவில் கவனம் ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனக்கென்று தனி பாதை போட்டுக்கொண்டு பயணம் செய்ய விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.