தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்து வரும் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த பாலியல் தொடர்பாக புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரிப்பதற்காக சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.
அதே சமயத்தில் இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனையடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கம் படுத்துதல், பெண் வன்கொடுமை சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள்.
இதற்கு இடையில் புகார் அளிப்பதற்கு வந்த பெண் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை தடுத்து நிறுத்தி மிரட்டியதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அதேபோல தமிழக காவல்துறை வட்டாரத்தில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது போடப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்ய இருக்கிறது. காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார். அதோடு இன்று மதியமே இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணை செய்ய இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.