கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த தனியார் பள்ளியில் இதற்கு அனுமதி இல்லையா? வெளியானது பகீர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்துள்ளது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில்ஈடுபட்டனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் இது அந்த பகுதியில் பெரும் கலவரமாக வெடித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோபத்தில் பள்ளிக்கு தீ வைத்தனர். இந்த கலவரத்தின் போது அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் அவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது.
இந்த சம்பவமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த கலவரம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து குழந்தைகள் நல ஆணையர் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி இது குறித்து கூறியதாவது, கள்ளக்குறிச்சி சின்ன சேலம் தனியார் பள்ளி விடுதியானது அனுமதியின்றி இயங்கியுள்ளது.அந்த வகையில் பதிவு செய்யப்படாத அந்த விடுதியில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர்.
இது குறித்து கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம் .முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.