கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி இருக்கின்ற சூழ்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, போன்ற பகுதிகளில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த மையங்களுக்கும், வீட்டு தனிமைப்படுத்துதல் இருக்கும் நோயாளிகளை பிரித்து அனுப்பும் மையம் கன்கார்டியா பள்ளியில் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், மாவட்டத்தில் ஒரு நாளை நோய் தொற்று பாதிப்பு 1500 இல் இருந்து படிப்படியாக குறைந்து சென்ற சில தினங்களாக நூற்றுக்கும் கீழாக பதிவாகியிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் தற்போது 200க்கும் மேற்பட்டோர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கோணம் அரசு பொறியியல் கல்லூரி, மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி, நோய் தொற்று சிகிச்சை மையங்களில் தவிர்த்து மற்ற மையங்கள் முழுவதுமாக மூடப்பட்டுவிட்டன.
தற்போது இருக்கும் நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய்த்தொற்று சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு தனிமை என்று ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 496 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக கன்கார்டியா பள்ளியில் செயல்பட்டு வந்த வகைப்படுத்தும் மையம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நேற்றுமுன்தினம் முதல் செயல்பட ஆரம்பமாகியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களில் ஒரு சிலர் வெளியே சுற்றித் திரிவதால் நோய்த்தொற்று பரவல் அதிகமாக புகார் வந்ததைத் தொடர்ந்து நோயாளிகள் யாரையும் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் எல்லோரையும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை கொடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அரவிந்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். இதன் காரணமாக, நோய்த் தொற்று இருக்கின்ற எல்லோருக்கும் இனி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.