கொரோனாவால் ஐ.டி நிறுவனங்கள் எடுக்க போகும் அதிரடி முடிவுகள்! கலக்கத்தில் ஊழியர்கள்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் ஒவ்வொரு தொழில்துறையும் கடுமையான பின்னடைவை சந்திந்து வருகின்றன. இதில் முக்கியமாக சேவைத் துறையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையானது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் பரவிய இந்த வைரஸ் பாதிப்பை எதிர்த்து ஒவ்வொரு நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வந்தாலும் அதே அளவிற்கு புதிய பாதிப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருவதால் பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கை மேலும் நீட்டிக்குமா அல்லது நிறுத்தி கொள்ளுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மக்கள் நம்பிக்கையுடன் அன்றாட பணிகளில் ஈடுபட முடியுமா என்ற அச்சமும் அவர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் முக்கிய சேவை துறையான தகவல் தொழில்நுட்ப துறையில் என்னனென்ன மாற்றங்கள் ஏற்பட போகும் என்று அதில் பணி புரிபவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதியதாக வேலை தேடுபவர்கள் முதல் ஏற்கனவே பணி புரிந்து சம்பள உயர்வை எதிர்பார்ப்பவர்கள் வரை அனைவருக்கும் இது குறித்து நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சமூக விலகலை ஏற்படுத்த பெரும்பாலும் புதிய ஊழியர்களை தேர்வு செய்வது நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்வது கூட தள்ளி வைக்க படலாம் அல்லது அவர்களின் சம்பளத்தை குறைத்து பணியமர்த்தலாம் என்று அந்த துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, நாடு முழுவதும் 90 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் வாய்ப்பை ஏற்படுத்தி, நம்பமுடியாத சிறப்பான முயற்சியை ஐடி துறை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் ஒரு பகுதியினரை வீட்டிலிருந்து பணி புரிய வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பணி நீக்கம் ,சம்பள குறைப்பு மற்றும் புதிய ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கடுமையான முடிவுகளையும் சில நிறுவனங்கள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது